“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டும் பரந்து கெடுக உலகியற்றி யான்” . (இரவச்சம் – குறள் 1062)
உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் மிகவும் தேவையான ஒன்று. மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் பசியின்றி வாழ உரிமை உள்ளது. வறுமையால் வாழ்வு நலிந்து, பசியால் உடல் மெலிந்து மக்கள் இறந்த கொடுமை அக்காலத்தில் நிகழ்ந்துள்ளது. இதை எண்ணி திருவள்ளுவர் மனம் வருந்துகிறார். வறுமையின் கொடுமையை விளக்க இரவச்சம், நல்குரவு, இரவு ஆகிய அதிகாரங்களை தன்னுடைய பொருட்பாலில் படைக்கிறார். வறுமைக்கு காரணம் தமது விதியென்றும், முன் ஜென்ம வினையென்றும் பலர் கருதுவர். ஒருவேளை வறுமைக்கும் பிறரிடம் பிச்சையெடுத்து வாழும் நிலைக்கும் கடவுள் தான் காரணம் எனில் கடவுளே நீ கெட்டு ஒழிக என்று கடவுளுக்கு சாபமிடுகிறார் வள்ளுவர்.
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டும் பரந்து கெடுக உலகியற்றி யான்”. (இரவச்சம் – குறள் 1062)
தன்னுடைய உழைப்பினால் கிடைத்தது கூழாக இருப்பினும் அதை விட இனிப்பான பெருமை சேர்க்கக்கூடிய பொருள் வேறொன்றும் இல்லை என்று உழைப்பின் மேன்மையை உரைக்கின்றார். தன்னுடைய உழைப்பினால் கிடைத்தது கூழாக இருப்பினும் அதை விட இனிப்பான பெருமை சேர்க்கக்கூடிய பொருள் வேறொன்றும் இல்லை என்று உழைப்பின் மேன்மையை உரைக்கின்றார்.
“தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலி னூங்கினியது இல். (இரவச்சம் – குறள் 1065)
பொருளாதார உரிமை :
நாம் வாழும் சமுதாயத்தில் நல்வழியில் பொருள் ஈட்டவும், அதை பாதுகாக்கவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவன் நல்வழியில் தான் பொருள் ஈட்டவேண்டும் என்பதில் மிகவும் ஆழமாக திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
“அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை”
ஒருவன் தீயவழியில் பிறர் அழும்படி சேர்த்த பொருள் யாவும், அவன் அழும்படி அவனை விட்டு அகலும். ஆனால் நல்வழியில் தேடும் பொருளை இழந்தாலும் பின்னர் வந்து பயன் தரும். பொருளை தேட சரியான நியாயமான வழிகளை மட்டுமே பின்பற்றவேண்டும் என்பதை வள்ளுவர் இதன் மூலம் வலியுறுத்துவது புலப்படும். அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று, தன்னை ஈன்றெடுத்து வளர்த்தவள் பசியாக இருப்பினும் சான்றோர் பழிக்கக்கூடிய அறமற்ற செயல்களை செய்க்கூடாது என்று விளம்புகிறார்.
“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.” (வினைத்தூய்மை – குறள் 656)
ஒருவன் தன் பகைவரின் செறுக்கை அழிக்க வேண்டும் என்று விரும்புவானாயின் அவன் பணத்தை ஈட்டவேண்டும். அதுவே பகைவனின் செறுக்கை அழிக்கும் மிகக்கூரிய ஆயுதம் என்று பணம் அல்லது பொருள் ஈட்டவேண்டிய கட்டாயத்தை பற்றி வள்ளுவர் கூறுகிறார்
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.”
வாழ்வதற்கான உரிமை
இந்த உலகில் பிறந்த அனைவர்க்கும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது. இது நம் அடிப்படை உரிமைகளுள் ஒன்று. எவரையும் சித்திரவதை செய்வது சட்டப்படி குற்றம். ஒருவன் கூறும் தீய வார்த்தைகள் மற்றொருவருக்கு உணர்வு ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என வள்ளுவர் கூறுகிறார்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.”
பிறர் தன்னைப்பற்றி கூறும் இனிய சொற்களால் இன்பமடைந்த ஒருவன் பிறர் வருந்தும்படி தீய சொற்களை எதற்கு கூறவேண்டும் என அவர் கேட்கிறார்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.”
இனிய சொற்களை விடுத்து கடுமையான, மற்றவர்களை காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்துவது, சுவையான பழங்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து காய்களை தின்பதை போன்றது என்று கூறுகிறார்.
தனி மனிதன் மட்டுமல்லாது அரசனும் மக்களுக்கான வாழும் உரிமையை தர கடமைப்பட்டவன் என்பதை திருவள்ளுவர் பின்வருமாறு விளக்குகிறார்.
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.”
ஒரு மன்னனின் செல்வத்தை அழிக்கும் படை அல்லது ஆயுதம் என்பது தன் குடிமக்கள் அழுத கண்ணீரே . மக்கள் வருந்தும்படி ஆட்சி செய்யும் மன்னனின் செல்வமும் வளமையும் விரைவில் குன்றும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
அரசன், மக்களை வருத்தி அதன் மூலம் பொருள் சேர்ப்பதை வள்ளுவர் வன்மையாக கண்டிக்கிறார். தன் மக்களிடம் அறமற்ற முறையில் வரி வசூலிக்கும் அரசனை கள்வனோடு ஒப்பிடுகிறார் அவர்.
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.”
தன் மக்கள் வருந்தும்படி வரி வசூலிக்கும் அரசன் , பிறரை ஆயுதம் கொண்டு பயமுறுத்தி, பொருளை அபகரிக்கும் கள்வனுக்கு ஈடானவன் என்று வள்ளுவர் கூறுகிறார்.மனிதனுக்கு முக்கிய உரிமைகள் பேச்சு மற்றும் எழுத்துரிமை. தன் கருத்துகளை பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் வெளிப்படுத்த திருக்குறள் ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் கருத்துகளுக்கான வார்த்தைகள் சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
தான் கூறும் அந்த சொல்லை விட வன்மையானதொரு சொல் இல்லாத அளவுக்கு சொல்வன்மை இருத்தல் வேண்டும் என கூறுகிறார்.தான் கூறவந்த கருத்துகளை உரைப்பதில் வல்லவனாகவும், மறதியும் , அச்சமும் இல்லாமல் சொல்வன்மை மிக்கவனாகவும் எவன் ஒருவன் உள்ளானோ அவனை வெற்றிகொள்ள யாராலும் முடியாது என்று பேச்சுரிமையை பற்றி கூறுகிறார்
சொலல்வல்லன் சோர்வுஇலான் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது” (குறள் 647)
No comments:
Post a Comment