புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் சொகுசான நிலைமையில் இருந்து கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களை விமர்சிக்கின்றார்கள்.
• இடைக்கால அறிக்கையை நிராகரிக்க முடியாது.
• யுத்தத்தின் இறுதியில் கஸ் ரோ பேசினார்
• சமஷ்டிக்கு சிங்கள சொற்பதம் இல்லை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் எல்லோருமே தலைவர்கள் என்று கருதுகின்றார்கள். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும்.
இலக்கை நோக்கி வெவ்வேறு தளங்களில் நின்று உழைக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அடிகளார் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் வலியுறுத்தியுள்ளார். அந்த செவ்வியின் முழு வடிவம் வருமாறு :-
கேள்வி:- நீண்டகாலத்திற்கு பின்னர் மீண்டும் தாயகத்திற்கு வருகை தரவேண்டும் என்று தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?
பதில்:– ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஆகியோர் இலங்கைக்கு விஜ யம் செய்யுமாறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். அதற் கமைய இங்கு வருகை தருவதற்கு தீர்மானித்திருந்தேன்.
பிரதமர் எனக்குரிய பாதுகாப்பு, பயண வசதிகளை வழங்கியிருந்தார். இங்கு வருகை தந்திருந்த நான் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட அரசியல் தரப்பினரையும், இராஜதந்திரிகளையும், சிவில் சமூகத்தினரையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து கலந்துரையாடல்களைச் செய்திருந்தேன்.
தற்போது நெருக்கடியான நிலைமையொன்றே காணப்படுகின்றது. அரசியல் தரப்பினரின் செயற்பாடு களுக்கு அப்பால் சமயத்தலைவர்களினதும் பங்கு மிக முக்கியமாகின்றது.
அதனடிப்படையில் நான் கர்தினால், ஆயர்கள், நல்லை ஆதீன குருமுதல்வர் ஆகியோரை சந்தித்தேன். ஆனால் முஸ்லிம், பௌத்த சமயத் தலைவர்களை சந்திக்க முடியவில்லை. அவர்களையும் சந்தித்து கலந்துரையாட வேண்டியுள்ளது. அரசியல்வாதிகளால் மட்டும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி அரசியல் தீர்வினைக் கண்டுவிட முடியாது.
இதில் அனைத்து மதத்தலைவர்களினது பங்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மக்களுக்கிடையில் புரிந்துணர்வும், இணக்கமும் ஏற்படுவதற்கு அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன.அவ்வாறான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும், எனது முதுமையின் காரணமாக இறுதி நேரத்தினை எனது மக்களுக்காக செலவழிக்கும் எண்ணப்பாட்டிலேயே இங்கு வருகை தந்துள்ளேன்.
கேள்வி:- தற்போதைய நிலையில் தமிழ் சமூகம் குறித்த உங்களின் அவதானிப்பு என்ன?
பதில்:- சிங்கள அரசாங்கங்கள், சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் அரசியல் போராட்டத்தினையும், விடுதலைப் போரையும் நடத்தியிருக்கின்றார்கள்.ஆனால் தற்போது வரையில் தமிழ் மக்கள் தங்களுடைய பலவீனங்களை உணரவில்லை. தமிழ் மக்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
எமது சமூகத்தில் இவ்வாறான நிலைமை தொடருகையில் வெளியிலிருப்பவர்களை குற்றம்சாட்டுவது தவறானது. மதத்தலைவர் என்ற அடிப்படையில் விடுதலை வேண்டுமாகவிருந்தால் முதலில் உங்கள் (தமிழ் மக்களின்) உள்ளத்திலே விடுதலை இருக்க வேண்டும்.அடிமைத்தனங்கள் இருக்கக்கூடாது. தமிழ் சமூகத்தினுள் சமகாலத்தில் அடிமைத்தனங்கள் வளர்ந்து வரும் நிலைமையே காணப்படுகின்றது. இது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் அக்கறை கொள்வதாக இல்லை. சாதி, பிரதேசம் போன்ற பல வேறுபடுத்தல்கள் காணப்படுகின்றன.
பௌத்த மதம் நற்கருத்துக்கள் பலவற்றை உரைக்கிறது. ஆனால் மகாவம்சம் அளித்த வரலாற்றுக் குறிப்புக்களின் அச்சத்தால் சிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் அச்சமான மனநிலையைக் கொண்டிருக்கின்றார்கள்.ஆகவே சிங்கள கணவனும், தமிழ் மனைவியும் ஒருவீட்டில் ஒன்றாக வாழ்வது கடினம். ஏனென்றால் பக்கத்தில் மாமியார் வீடு (தமிழ்நாடு) உள்ளது. தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகள் என தமிழ் நாட்டுக்கு எதற்கெடுத்தாலும் ஓடிச் செல்வதால் சிங்களவர்களுக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றன.அந்த சந்தேகங்களை போக்குவதற்கு நாம் செயற்படவேண்டியுள்ள நிலையில் முதலில் எமக்குள் காணப்படுகின்ற குறைபாடுகளை போக்கிக்கொள்ள வேண்டும்.
சாதி, பிரதேசவாதம் போன்றவற்றுக்கு எதிராக தாயகப்பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தால் நிச்சயமாக என்னைத் தூற்றுவார்கள். இருப்பினும் அவற்றைப் பொறுத்துக்கொண்டு முதலில் எமக்குள் சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
கேள்வி:- தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் பலவீனங்களை போக்குவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- அடிமட்டத்திலிருந்து பாரிய மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. நான் தாயகத்தில் இருந்த காலத்தில் நற்சமூக நடுநிலை நிலையம் என்பதை நடத்தினேன். ஆயர்கள், நல்லை ஆதீனம், ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் போன்றவர்களை போஷகர்களாக வைத்து மனிதனை மையப்படுத்திய சமூகத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்தேன்.
ஆகவே மதங்கள் மதில்களுக்குள் இருந்துவிட்டுச் செல்லமுடியும். ஆனால் இதுபோன்று சமுதாய மாற்றத்திற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான குத்துவிளக்கினை ஏற்றினால் கல்லெறி விழும் நிலைமையும் இருக்கின்றது. ஆனாலும் சமூகத்திற்கு இவை அவசியமாகின்றன. மதத்தலைவர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- இன நல்லிணக்கம், ஒற்றுமை குறித்து பேசப்படும் இத்தகைய காலகட்டத்தில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பல விடயங்களை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அவற்றை விடுத்து வேறுவழியில் சென்றுவிட்டார்.
உண்மைகள் அறியப்பட வேண்டும், நீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குற்றங்கள் கண்டறியப்பட வேண்டும், குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும்.உலக ஒழுங்குகளில் காணப்படும் நீதித்துறையில் குற்றவாளிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிறைதண்டனை இல்லையேல் தூக்கு தான் வழங்கப்படுகிறது.
எம்மைப்பொறுத்தவரையில் அதற்கும் அப்பால் சில செயற்பாடு களை மேற்கொள்ள வேண் டியுள்ளது. அதற்கு அப் பால் பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான சூழலை உருவாக்கவேண்டியுள்ளது.அதனை நோக்கிச் செல்வதன் காரணத்தால் தான் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை வலியுறுத்துகின்றோம். இது பழிவாங்கும் செயற்பாடு அல்ல. மஹிந்த ராஜபக் ஷவை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று எம்மில் பலர் கூறுகின்றார்கள்.
அவ்வாறு செய்தால் அனைத்தும் முடிந்தது என்று பொருள் அல்ல. இது தமிழர் தரப்பில் கொண்டிருக்கும் தவறான நிலைப்பாடாகும். மீளநிகழாமையை உறுதிப்படுத்தி எதிர்காலத்தினை சிறப்பாக உருவாக்க வேண்டியுள்ளது.
கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் கால நீடிப்புச் செய்தமை சரியானதொரு நகர்வென்று கருதுகின்றீர்களா?
பதில்:- நான் 25 வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் பங்கேற்று வருகின்றேன். தற்போது எனது மனதுக்கு ஒரு தெளிவான விடயம் நடைபெற்றுள்ளது. அதாவது, 25 வருடத்திற்கு பின்னர் இலங்கையை ஐக்கிய நாடுகளின் பிடிக்குள் கொண்டு சென்று விட்டோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் அரசாங்கம் ஐ.நா.வுக்கு பொறுப்புக்கூற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எமது போராட்டத்தை 27நாடுகள் தடைசெய்தன. 20 நாடுகள் எமக்கு எதிரான போராட்டத்திற்கு ஆயுதம் வழங்கியிருந்தன.
தற்போதைய நிலையில் தான் ஐ.நா உட்பட சர்வதேச தரப்புக்கள் எமது பிரச்சினையை நன்கு உணர்ந்து கொண்டுள்ளன. ஆகவே அந்த ஆதரவை நாம் கைவிட முடியாது. அதேநேரம் தமிழர்களும் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அவதானிக்கின்றார்கள். எனவே தேவையற்ற விரக்தியை கைவிட்டு நம்பிக்கையுடன் ஒரு தீர்வை நோக்கிச் செல்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குகின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
தமிழர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற தோற்றப்பாடு சர்வதேசத்திற்கு காட்டப்படுமாகவிருந்தால் அனைத்தும் நிறைவுக்கு வந்து விடும். ஆகவே இலங்கை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவுள்ளது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறுகின்றது. ஆகவே இலங்கையால் முழுமையாக அவற்றை உதறித்தள்ளிவிட முடியாது. அந்த அடிப்படையில் ஐ.நா. மற்றும் சர்வதேசத்தின் இலங்கை மீதான பிடியை நாம் பயன்படுத்த வேண்டும். தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயற்படாது பகுத்தறிவுடன் செயற்பட வேண்டும்.
கேள்வி:- தற்போதைய நிலைமைகளை நீங்கள் அவதானித்துள்ள நிலையில் பொறுப்புக்கூறுதல் விடயத்தில் அரசாங்கம் முழுமையாக ஈடுபட்டு முன்னேற்றகரமாக செயற்படுகின்றது என்று கருதுகின்றீர்களா?
பதில்:- தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறல் விடயங்களை மெதுவாகவே செய்து வருகின்றார்கள். அவர்களுக்கான எதிரிகள் உச்சமாக செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். அதனால் குழப்பகரமான நிலைமையொன்றே உள்ளது.குறிப்பாக 70ஆண்டுகளாக தென்னிலங்கை தரப்புக்கள் கூறிவந்த கருத்துக்களைதான் குழப்ப வேண்டுமென்று கருதுபவர்கள் தற்போதும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
அதற்கு முகங்கொடுப்பதென்பது மிகக் கடினமானதொன்றாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் உங்களின் ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் கருத்துக்கள் மாறுபட்டுள்ளன.
பௌத்த மதத்தலைவர்களிடத்தில் பிழையான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. உண்மைகளை கூறுவதற்கு தயங்குகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் முன்னேற்றகரமான கருத்துக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என நான் அவரிடத்தில் நேரடியாகவே கூறியுள்ளேன்.
கேள்வி:- ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் போக்கினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அடிப்படையில் நாங்கள் தமிழர்களே. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பகரமான நிலைமைகள் காணப்படுகின்றன. எமக்குள் இவ்வாறான பலவீனங்கள் இருக்கின்றன என்பதையே நான் மீண்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.நான் யாழில் தங்கியிருந்தேன். அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளேன். இருப்பினும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தவில்லை.
குறிப்பாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபையினரின் செயற்பாடுகளை பார்த்ததில் எனக்கு மிகப்பெரும் மனவருத்தமாக இருக்கின்றது.எமக்கு சற்றேனும் அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதும் நடப்பது என்ன? நிதி மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் செல்கின்றது. வடமாகாண சபையில் சண்டை சச்சரவுகள் தமக்குள்ளேயே நடக்கின்றன.
இந்த இடத்தில் ஆயர் அம்பலவாணப்பிள்ளை என்னிடத்தில் அடிக்கடி தெரிவிக்கும் கருத்தான, தமிழர்கள் நல்ல பணியாளர்கள். ஆனால் அவர்கள் தம்மை ஆளத்தகுதியற்றவர்கள் என்பது தான் நினைவுக்கு வருகின்றது. ஏனைய மாகாணங்களின் செயற்பாடுகளை பாருங்கள். அவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தாலும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமே இருக்கின்றார்கள். உள்ளக அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.
ஆனால் வடக்கு மாகாண சபையில் உள்ளவர்கள் அதிகமாக அரசியல் விடயங்களை பேசுகின்றார்களே தவிரவும் மாகாண ரீதியிலான விடயங்களை முறையாக கவனிக்கவில்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தி வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு அதற்கு தலைமைத்துவம் வழங்குபவருக்கு இருக்கின்றதல்லவா?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக கட்டமைப்பாகும். இதில் உள்ள பலருக்கும் வெவ்வேறு பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. கூட்டமைப்பினை உறுதியாக கொண்டு செல்லவேண்டிய கடப்பாடு சம்பந்த னுக்கு உள்ளது. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் அவரால் உடனடியாக தீர்மானங்களை எடுக்க முடியாது.உதாரணமாக வடமாகாண முதலமைச்சரின், சபையின் செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு சில வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தாலும் அவற்றை உடனடியாக பிரதிபலிக்க முடியாது. பொறுமையாகவே அனைத்தை யும் கையாள வேண்டும்.
மேலும் அவருடைய அனுபவமும், முதுமையும் மெதுவான நகர்வுகளின் ஊடாகவே இலக்குகளை அடைய முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றன. கூட்டமைப்பினை பிளவடையாது பார்த்துக்கொள்ளவேண்டிய பாரிய கடப்பாடும் அவருக்கு உள்ளதன் காரணத்தால் தான் அவர் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்படுகின்றார்.
கேள்வி:- தற்போது வடக்கு அரசியல் தளத்தில் மாற்றுத்தலைமையொன்றுக்கான அவசியம் தொடர்பில் கருத்தியல் ரீதியான நிலைப்பாடுகள் காணப்படுகின்றமை பற்றி?
பதில்:- தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவையில்லை. எமக்கு வேறொருவரின் தலைமையில் மாற்று சக்தி அவசியம் என்று சில தரப்புக்கள் பேசுவதை நான் அவதானித்துள்ளேன்.மாற்று தலைமைத்துவம் என்பது கடையில் கொள்வனவு செய்யும் பொருள் அல்ல. இவ்வாறான நிலைப்பாடுகளை தமிழர் தரப்பு எடுப்பதானது மிகவும் முட்டாள்தனமானதாகும்.
தலைமைத்துவத்தை வழங்குமாறு மக்களால் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய பொறுப்பிலிருந்து சில நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள். அவற்றின் போக்குகளை அவதானிக்க வேண்டும்.
கலந்துரையாடல்கள் ஊடாக எமது இலக்குகளை அடைவதற்குரிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவாக இருக்க வேண்டும் என்பது அல்ல நிலைப்பாடு. ஆனால் அவர்கள் தம்மாலானவற்றை முன்னெடுக்கின்ற போது அதனை குழப்பும் வகையில் செயற்படக்கூடாது.சில விடயங்கள் உடன் நடக்கவில்லை என்பதற்காக தற்போது மாற்றுத்தலைமை குறித்து பேசுகின்றனர். நெருக்கடி அளிப்பதன் மூலம் தான் பெறமுடியும் என்றும் கூறுகின்றார்கள். தமிழர்கள் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளவேண்டும்.
நெருக்கடி வழங்குவதென்பது முக்கியமானதொன்றே. ஆனால் மிதமிஞ்சிய நெருக்கடி வழங்குவதானது எமக்கான நடவடிக்கைகளை எடுக்க முயல்பவர்கள் வீழ்ந்து விடுவார்கள். குறிப்பாக கூறுவதானால் இந்த ஆட்சியை மாற்றினால் பின்னர் என்ன நடக்கும்? எதுவுமே நடக்கப்போவதில்லை.
கேள்வி:- புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- தற்போது ஒரு இடைக்கால அறிக்கையே வந்துள்ளது. அதனை முழுமையாக நிராகரிப்பதோ அல்லது எரித்து விடுவதோ சரியான அணுகுமுறையாக அமையாது. எமது தரப்பைப்போன்றே சிங்களத் தரப்பிலும் இருவேறுபட்டவர்கள் இருக்கின்றார்கள்.
ஆகவே பக்குவமாக அந்த விடயங்களை கையாள வேண்டும். அதுகுறித்த ஆழமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு மேலும் முன்னேற்றகரமான விடயங்களை உட்கொண்டு செல்ல முடியுமென்றால் அதற்குரிய வழிகளை கையாள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரச பயங்கரவாதத்திற்கு எதி ராக போராடினார். அதற்கு நான் ஆதரவாக இருந்தேன். அவரை நான் இன்றும் மதிக்கின்றேன்.
அவர் கூட எடுத்தவுடனே அனைத்தையும் எதிர்த்து ஆயுதத்தை தூக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஆரம்பித்து சில வருடங்களுக்கு பின்னரே ஆயுதம் தூக்கினார். அதுபோன்றே ஏனைய சந்தர்ப்பங்களிலும் ஆராய்ந்த பின்னரே நடவடிக்கைகளை எடுப்பார்.
இந்த தேசத்தில் உள்ளவர்களே விடுதலையை வேண்டி நிற்கின்றார்கள். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் சொகுசான நிலைமையில் இருந்து கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களை விமர்சிக்கின்றார்கள். அது எந்தவகையில் நியாயமாகும். இங்கு விடுதலையை வேண்டும் மக்களே அது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி:- இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான சமஷ்டி இடம்பெறாமையால் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?
பதில்:- இடைக்கால அறிக்கையில் எதுவுமே இல்லை என்று கூறிவிட முடியாது. அதற்காக அதில் உள்ள அனைத்து விடயங்களும் போதுமானது என்றும் கூறிவிடமுடியாது.
1927ஆம் ஆண்டு சமஷ்டி குறித்து பண்டாரநாயக்க பேசும்போதும், 1947இல் சமஷ்டி கட்சி ஆரம்பித்தபோதும் தென்னிலங்கையில் யாரும் எதிர்க்கவில்லை. 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் தான் தமிழர்கள் தனிநாடு கேட்கின்றார்கள் என்ற சிந்தனை சிங்களவர்களுள் எழுந்தது.
70ஆண்டுகளாக நாம் சமஷ்டி குறித்து பேசுகின்றோம். சமஷ்டி (பெடரல்) என்பதற்கு சிங்கள மொழியில் ஒரு சொற்பதம் இல்லை. அவர்கள் சமஷ்டி என்றவுடன் நாடு பிரிகின்றது என்றே கருதுகின்றார்கள்.
ஆகவே அவர்களுக்கு அது குறித்த விளக்கமளிப்புக்கள் செய்ய வேண்டியுள்ளது. 70ஆண்டுகளாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தவில்லை.
மொழி ரீதியாக பிரிக்கப்பட்டதால் எமது பிரச்சினையை நாமே தான் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே தமிழ் மக்கள், சிங்கள மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.
கேள்வி:- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இறுதியாகச் சந்தித்தபோது நீங்கள் எத்தகைய விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தீர்கள்?
பதில்:- வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள அழைக்கப்படவேண்டும். இந்தியாவைப் பகைக்கக் கூடாது உள்ளிட்ட விடயங்களை கோரியிருந்தேன்.
கேள்வி:- இறுதிப்போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகள் தரப்பினர் உங்களை தொடர்பு கொண்டார்களா?
பதில்:- என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வழமை போன்றே அடிக்கடி என்னுடன் பேசும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் கஸ்ரோ மட்டுமே தொடர்பு கொண்டு பொதுவான விடயங்களை பேசியிருந்தார்.
கேள்:- விடுதலைப் போராட்டம் தோல்வி கண்டமைக்கு காரணம் என்ன?
பதில்:- என்னைப் பொறுத்தவரையில் தனி மனிதன் விடுதலைப் போராட்டத்தின் அனைத்து விடயங்களையும் முழுமையாக கையாள முடியாது.
“அவருக்கும் (பிரபாகரனுக்கும்) பல நெருக்கடிகள் இருந்தன. இறுதி நேரத்தில் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கமும் இருந்திருக்கவில்லை. அவருக்கு வேண்டிய ஆலோசனைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆலோசனை குறைபாடுகள் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் இறுதித் தருணங்களில் என்ன நடந்தது என்பதை சரியாக கூறமுடியாது.”
கேள்வி:- தாயகத்தில் தமிழ்த் தரப்புக்களை ஒற்றுமையாக இருக்குமாறு கோரும் நீங்கள் புலம்பெயர் தேசத்தில் பிரிந்திருக்கும் தமிழ் தரப்புக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கருதவில்லையா?
பதில்:- இங்கிருப்பதைப் போன்று தான் புலம்பெயர் நாடுகளிலும் கடும்போக்காளர்கள், மென்போக்காளர்கள் என்ற இருதரப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களை சந்திக்கின்ற போதெல்லாம் நான் தாயகத்திற்கு நேரில் செல்லுங்கள். அங்குள்ள நிலைமைகளை பாருங்கள். மனிதாபிமான அடிப்படையில் சேவையாற்ற முற்படுங்கள். அனைவரும் அரசியல் செய்ய முயன்றால் அது முடியாத காரியமாகும் என்பதை வலியுறுத்தி வருகின்றேன்.
நான் நேரில் வந்து அவதானித்ததன் பிரகாரம் பல்வேறு விடயங்கள் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உட்கட்டமைப்பு விடயங்கள் முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே அது தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
மேலும் எமது சனத்தொகை வீதம் தாயகத்தில் படிப்படியாக குறைந்து செல்கின்றது. அனைவரும் வேலைவாய்ப்பினை தேடி வெளிநாடு செல்கின்றார்கள். ஆகவே தொழில்வாய்ப்புக்களை தாயகத்திலேயே ஏற்படுத்தினால் எமது சனத்தொகை வீதத்தினையும் நிலையாக பேண முடியும். இது தொடர்பில் நான் புலம்பெயர் தேசத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளேன்.
கேள்வி:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரச தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளீர்கள். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவது தொடர்பில் அவர்களின் மனநிலை எவ்வாறுள்ளது?
பதில்:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பேசும்போது அவர்கள் நல்ல சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகின்றார்கள். என்போன்றவர்களின் உதவிகளையும் கோருகின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கு கட்சி ரீதியாக, எதிர்த்தரப்புக்கள் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் என்னிடத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள் அல்லவா? பொதுவாக பார்க்கையில் நம்பிக்கை கொள்ளக்கூடிய அளவில் அவர்களின் கருத்துக்கள் காணப்படுகின்றன.
கேள்வி:- தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்க வேண்டுமானால் அது எவ்வாறு அமைய வேண்டும்?
பதில்:- இந்தியா மாகாண சபை முறைமை தொடர்பாக குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை என்னால் கூறமுடியாது.
அப்படியிருக்கையில் மாகாணங்களுக்கு போதியளவு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நிதி,பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்பட்ட மாகாண சபை முறைமையானது அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பாகவே அமையும். இதன்மூலம் எம்மை நாமே நிருவகிக்கக்கூடிய சுதந்திரம் உருவாகும். அத்தகையதொரு நிலைமை முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள். பௌத்த மதம் நீண்டகாலமாக முதன்மை ஸ்தானத்திலேயே உள்ளது. ஆகவே அவற்றை மறுத்து போராடுவதை விடுத்து எமக்குரியவற்றை பெற்று சமத்துவத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே நாட்டை பிரிக்காது தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.
விடுதலை நோக்கிய போராட்டமும் பயணமும் ஓட்டப்பந்தயமல்ல. ஓட்டப்பந்தயமென்றால் ஒருவரை வீழ்த்தி மற்றவர் செல்லமுடியும். ஆகவே விடுதலை நோக்கிய போராட்டமும் பயணமும் ஒரு உதைபந்தாட்ட விளையாட்டைப் போன்றது.
இலக்கை நோக்கி வெவ்வேறு தளங்களில் நின்று உழைக்க வேண்டும். தலைவர்களுக்கிடையிலான ஒற்றுமை தற்போது எமக்கு கிடைக்கப்போவதில்லை. பிரபாகரனுக்குப் பின்னர் எல்லோருமே தலைவர்கள் என்று கருதுகின்றார்கள். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும். அனைவரும் வெவ்வேறு விடயங்களை முன்னகர்த்திச் சென்று தீர்வு என்ற இலக்கை அடைய வேண்டும்.
கேள்வி:- தாயக மக்களுக்காக அடுத்த கட்ட உங்களின் நகர்வு என்ன?
பதில்:- எனக்கு தற்போது 83வயதாகின்றது. இறுதிக் காலத்தில் என்னுடைய மண்ணிற்கு வருகை தந்து மக்களுடன் மக்களாக இருந்து எனக்களிக்கப்பட்ட கடமைகளை செய்யும் எண்ணத்துடன் இருக்கின்றேன்.அதற்குரிய தருணங்கள் அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் வருவதற்கு காத்திருக்கின்றேன்.